கோவில்களின் பிறப்பிடம்
நான்கு சுவற்றாலான -
மனசு!
உடல் சுட்டெரிக்கும் கோபம் காமம்
போட்டி பொறாமை வெற்றி தோல்வி
மகிழ்ச்சி கண்ணீர் -
அனைத்தும் சுமந்த மண் ஓவியம்!
முயற்சியும்
உழைப்பும்
குழைந்துக் கொண்ட சாதனை!
பண இருப்பை
உலகிற்குக் காட்டிக் கொள்ளும்
படோடாபம்!
நிறைய பேருக்கு
சுயமாக கிடைத்திடாத
வாழ்நாள் கனவு!
தெருவில் -
குடும்பம் நடத்துபவரை கண்டு
பல்லிளிக்கும் வண்ணக் குவியல்!
விட்டுச்சென்ற அம்மா
அப்பாவின் சப்தங்கள் நிறைந்த
நினைவுக் கூடு!
நான் தத்தி நடந்த
வளர்ந்த - அழுது அடம் பிடித்த
வாழ்ந்த மொத்தத்தின் அடையாளம் வீடு!
No comments:
Post a Comment